சனி, 5 ஜனவரி, 2019

நட்சத்திரக் கண்கள் - புத்தக விமர்சனம்

 புத்தக   விமர்சனம்

நட்சத்திரக் கண்கள்
ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
விலை: ரூ.80

புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை
சென்னை - 600 018

நிலா போன்று அழகான கதைகள்... அவற்றுடன் நட்சத்திரங்கள் போன்று ஆச்சர்யமான அறிவியல் தகவல்கள்... இதுதான், ‘நட்சத்திரக் கண்கள்’ கதைத் தொகுப்பு. மொத்தம் 14 கதைகளை அளித்துள்ளார், ஆசிரியர்     கொ.மா.கோ.இளங்கோ. சிறார்களுக்காக பல்வேறு கதைத் தொகுப்புகளை எழுதிய அனுபவம், இந்தத் தொகுப்பில் நன்கு கைகொடுத்துள்ளது. ஒவ்வொரு கதையுமே மிக எளிய நடையில், எங்கும் தடையின்றி செல்கிறது.
‘அட’ எனப் புன்னகைக்கச் செய்யும்  புதுமையை ஒவ்வொரு கதைகளுக்குள் கொண்டுவந்திருப்பது சிறப்பு. உதாரணமாக... ‘நீ என்ன ஆகப்போறே?’ கதையில் வரும் மீனா என்ற சிறுமி, எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறாள். எழுத்துகள் பற்றி அவள் சொல்லும் விஷயம், அவ்வளவு அழகு.
ஒவ்வொரு கதைக்குப் பிறகும் இணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள், நம்மைச் சுற்றியிருக்கும் பிற உயிரினங்கள், சுற்றுச்சூழல் மீதான அக்கறையை உணர்த்துகிறது. ஓவியங்கள் ஒவ்வொன்றும் தொகுப்புக்கு அழகு சேர்க்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், இயற்கையையும் உயிரினங்களையும் இன்னும் அதிகமாக நேசிப்போம் என்பதில் சந்தேகமில்லை


கதை மந்திரம் கற்றுத்தரும் கதாசிரியர் கொ.மா.கோ.இளங்கோ



சமகால குழந்தை இலக்கியத்தில் புதிய தடங்களைத் தன்னுடைய படைப்புகளில் படைத்து வருபவர் கொ.மா.கோ.இளங்கோ. யதார்த்தத்தில் அதிபுனைவை மிகக்கச்சிதமாக கலந்து, அவர் எழுதிய மந்திரக் கைக்குட்டை’, அறிவியல் புனைவு சிறார் நாவல்ஜிமாவின் கைபேசி’, சொந்த வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு எழுதிய வாழ்வியல் சித்திரமான சஞ்சீவி மாமாஎன எல்லாவற்றிலும் புதிய பாதைகளைப் போடுகிறவர் கொ.மா.கோ.இளங்கோ.

குழந்தை இலக்கிய மொழிபெயர்ப்புப் படைப்புகளிலும் அவருடைய தேர்வு குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற மொழிநடையும், கதை சொல்லும் பாணியும், அவரை குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவராக மிளிரச்செய்கிறது. குழந்தை இலக்கியத்தில் எல்லாவிதமான சோதனை முயற்சிகளையும் செய்து புதிய, புதிய படைப்புகளை உருவாக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சமகால குழந்தைகளின் மனநிலையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுத வேண்டிய கட்டாயம். இன்னமும் காலத்துக்கு பொருந்தாத முனிவர், சாபம், வரம், என்று பொருட்களை வைத்து எழுதத் தேவையில்லாத காலம்.

குழந்தைகளிடம், அறிவியல் பார்வையையும் கற்பனை வளத்தையும் மானுட அறத்தையும் வளர்க்கிற படைப்புகளை உருவாக்க வேண்டிய காலம். அப்படியான பல குறிப்பிடத்தக்க படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் கொ.மா.கோ.இளங்கோ. அதனாலேயே கொ.மா.கோ.இளங்கோ, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளின் முன்வரிசையில் இருக்கிறார்.

-      உதயசங்கர்

நட்சத்திரக் கண்கள்’

நட்சத்திரக் கண்கள் - அற்புதங்கள் நிகழ்த்தும் சிறார் கதைகள் 


ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
விலை: ரூ.80
புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை
சென்னை - 600 018





கதைகள் என்ன செய்யும்? குழந்தையின் அழுகையை நிறுத்தும். அம்மாவைப் போல ஆறுதல் சொல்லும்.  கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச்செல்லும். கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.
               நட்சத்திரக் கண்கள்புத்தகத்தில், உங்களோடு பழகக் காத்திருக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
கோதையைத் தெரியுமா? அவர்களது வீட்டிலுள்ள கோழிகதை முட்டைகள்இடும் என்பதை நம்ப முடிகிறாதா? நந்தனின் கண்களில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்தீர்களா? அவன் தொலைத்த நட்சத்திரங்களைத் தேடித்தந்தது  யார் தெரியுமா?
பாருங்களேன்! சுனிதா வீட்டுத் தோட்டத்திலுள்ள மரத்துக்கு தாடி முளைத்திருக்கிறதாம். அம்பிகாவின் தம்பி வளர்க்கும் அணிலுக்காக, செவ்வாய் கிரகத்தில் கொய்யா மரத்தை வளர்க்கப் போகிறாளாம் பொம்மி.
வாருங்கள் குழந்தைகளே! இந்த புத்தகத்திலிருக்கும் அதிசயக் குடை ராட்டினத்தில் ஏறிக்கொள்ளுங்கள். அற்புதங்கள் நிகழ்த்தும் சிறார் கதைகள் நிறைந்த உலகைச் சுற்றி வலம் வருவோம்.