ஆனந்த விகடனில் அட்டகாசமாய் அலங்கரித்த கவிதை

ஆனந்த விகடனில் அட்டகாசமாய் அலங்கரித்த கவிதை



ஆனந்த விகடன் இதழ் 30 .03 .11  ல்  ' சொல்வனம் ' பகுதியில் ' பிள்ளையார் எறும்புகள்' வெனும்தலைப்பில் கவிஞர் எழுதிய கவிதை பிரசுரித்து பெருமை சேர்த்தது . 

பிள்ளையார் எறும்புகள்


யானையின் நிறத்தில் 
சுவரின் துதிக்கை பிடித்தேறி 
ஒரே நேர்கோட்டில் ஊர்கின்றன 
எங்கள் வீட்டு
பிள்ளையார் எறும்புகள்.

எண்ணிக்கை குறிப்பெடுத்து வரும்
என் பிள்ளையின் முயற்சி
சுலபமாக காலேறிவிடும்
எறும்புகளால் தோற்கடிக்கப்படும்
கொலுசு மணிக்குள் புகுந்த
எறும்பொன்று
இனியும் முகம் காட்டவேயில்லை.

இருந்தாலும் அவைகள்
யாரையும் இம்சிப்பதில்லை.

நானும் பிள்ளையும்
எதிரெதிரே ஊர்ந்தோம்
எறும்புகள் சொல்லித்தரும்
மூக்குரசும் பயிற்சி
இஷ்டமென்றாள்

பூஜையறைக்குள் புகும்
பிள்ளையார் எறும்புகள்
மாடி வீட்டில் பதம் பார்த்த
லட்டுத்  துகள்களை
விநாயகர் பொம்மையின்
துதிக்கை சேர்ப்பிக்கும்.

விநாயகர் லட்டு பிரியரா? வேனும்  
என் பிள்ளையின் கேள்விக்கு
அர்த்தம் புரியாமல்
அங்கிருந்து நகர்கிறேன் நான்


ஆனந்த விகடன் ஆசரியர் குழுவிற்கு நன்றிகள் பல .