திங்கள், 5 செப்டம்பர், 2011

கனவு நுரைத்த கவிதைகள்

 
 
இரவு வானம்

சூரியன்-
பகலில்
மத்தாப்பெரிக்கிறான்.
நெருப்பு பொறியில்
துளைகளாகி போகிறது
இரவு வானம் .



களவாணி

இதமான மௌனத்தை பெயர்த்து
களவாடத் தூண்டும்
இரவு வானில்
சிதறி கிடக்கம்
நட்சத்திரங்கள்




மனசுக்காக …

இருபதாயிரம்
துளைகள்
வியர்வை சொரிய
எங்கேனும்
இரு துளையுண்டா?
இனியவளின்
இதயம் நுழைய …




நிலா முத்தம்


கிண்ணம் நிறைய
நீரெடுத்து
கால்கள் நனைத்து
கொள்கிறேன்
நழுவி விழுகிறது
நிலா !



திருந்த செய்


பிழைகளெல்லாம்
பழைய பித்தளை பாத்திர
துளைகள்
திருத்தங்கள் ளெனும்
ஈயம் பார்த்து
அடைத்தல் சிஷ்டம்
முலாம் பூசி
மறைத்தல் கஷ்டம்

நன்றி  :  திண்ணை இணைய இதழ்  




கனவோடு..

கனவில் சிறகொடியும்
காதல் கிளிகளின்
கூண்டு





பொய் முகம்

புகழ், நிழல்
பொய் முகங்கள்

நெருப்புள் இறங்கி
தீய்வதாய் உணர்

எந்த புகழ்
யார் நிழல்
உடன்கட்டையேறும்?



பொய்யுறவு


மல்லிகை வாசம்
இரவெல்லாம் நுகரும்
ரோஜா முற்கள்





பட்டறை

நெருப்பு காயும் இரும்பு
சிவந்து போன பார்வை
துருத்தியூதும் பையன்

நன்றி  : கூடல் இணைய இதழ்
 
 

உழைப்பின் பிழைப்பு

உழைப்பின்
உள்ளங் கைகளில்
தனக்கான கை ரேகை
கணித்துக் கொள்கிறது
எஜமானத்துவம்

வியர்வை கொட்டி
விதைத்து
களைப்பின் கதிர்கள்
அறுவடை செய்து
வலியால் லாபமடைந்து
மீண்டுமொரு
வெள்ளாமை விரும்பி
காத்திருக்கிறது
உழைப்பு

விடிவில்லா வறுமையின்
மகசூலுக்காக.



பார்வை

 
தொலைவிலிருந்து கேட்கும்
உன் அழைப்பின்
வாசம் உணர்கிறேன்
அருகாமை நெருங்கி

கழிந்த இரவின்
கடந்த வேகத்தின்
ஒலி சிதறல்களை
பொறுக்க முற்பட்டு
தோற்றுவிட்டேன்

இருள் காட்சிகள் மட்டும்
இமைக்குள்ளான நாடாவில்
பதிவாயிருக்கும்

உடனிருக்கும் கைக்கோலின்
அழை மணியை
பழுது நீக்கிக்கொள்
என்றுமே நலமோடிருக்கும்
கப்பிய இருளையும்
உடனிருக்கச்சொல்

தேநீர் கோப்பை நிறைய
தீங்கிளைத்த சங்கடங்களை ஊற்றி
ஜோல்னா பைக்குள் பதுக்கி வை

விளையாத நம்பிக்கையோடு
நானும் உன்னை
நெருங்கி விட்டேன்
நீண்ட நாட்களுக்கு பின்

தட்டில் விழுந்த
மோர் சோற்றில்
உன்னுள் திருடிய
தியாகம் குழைத்து
வைத்திருக்கிறேன்
என் மனசின் சாட்சியை
ஊறுகாயாய் தொட்டுக்கொள்

காசொலிகள் மட்டுமே
கவனமில்லை
பார்க்க, கேட்க, உணர முடியாத
ரூபாய் நோட்டுகளில்
எழுதப்பட்டிருக்கும்
நம் இருவரின்
கருப்பு கையெழுத்து

ரெட்டை நொங்கு நீக்கிய
பனக்காய்களாய்
நெகிழும் கண்களில்லா பிழைப்பின்
துணையின் திடத்தை
ஊடகமாக்கி
தெருவோரம் ஒட்டி செல்ல
வண்டி தயாரிக்கலாம்

சத்தியத்தை முன்னிறுத்தி
கொட்டாங் குச்சியின் துணையோடு
நெடுந்தொலைவு வரை
மனக் காட்சிகளின் பாதையில்
இருள் வண்டி
ஓட்டிக் கொண்டிருக்கலாம் .

ஓடி வராதே!
ஒட்டியுள்ள கருந்திரை
உடனிருக்கட்டும்.






மணல் நினைவுகள்

  திருப்தியளிக்கத்தான்
செய்கிறது
புது வீடு கட்டும் சூழல்
சிவப்பு, சிவப்பாய்
உழைப்பின் இரத்த ஓட்டத்தை
நினைவில் கொணரும்
ஒட்டு மொத்த
செங்கற்களில் நடுநடுவே
பக்குவமாய் பிடித்தத்தில்
பற்றிக் கொள்கிறது
நிம்மதியின் சாந்து கலவை!
வெளிப்புற பூச்சுக்கென
கொட்டி வைத்த ஆற்று மணலில்
'கிச்சா''கிச்சா' தாம்பூலம்
விளையாடி மகிழ்கிறது
கூழாங் கற்கள் தொய்வின் துணையில்
இன்னமும் உயிர்பித்திருக்கும்
மீன் குஞ்சொன்றின் நினைவு!

நன்றி :  கீற்று இணைய இதழ்
 
 
 

  எமக்குள்ளே இடைவெளி

யாத்வி-
கவிதை மரபின்
மோகப் பிழை

சங்கீதம் கற்போம்
எட்டாவது சுரம்
நீ.. நெடில் அவள்

உரசல்களுக்கு
விடுப்பில்லை யினி
இரவின் தொடர் சுற்று

பத்துக்கும், ரெண்டுக்கும்
இடைபட்டு
கடக்கும் முள்
முறியும் நேரம்
பன்னிரண்டு

கழுத்து சுற்றிய வட்டம்
முத்தங்களின்
பாசி மணி மாலை

சுடர்-
மங்கி,தொய்ந்து
எரியும்
உதடு ஊரும் எச்சில்
அளவு தீராமல்

விரல்கள் அணுகும்
வீணை நரம்புகள்
பாய்கிற பயம்

எட்ட தாவி
புதையுண்டு போகும்
வெட்கம்

கலகங்களின் சூட்டில்
தணிகிறது
உட் பருமன்

ஆயிரம் கோடி
இறகுகளோடு
பட்டாம் பூச்சிகள்
அடைபடும் தனியறை

ஏகாந்த தேனடை
எங்கேனும்
வடிய வடிய கசியும்
துளி ஏக்கம்

அதற்கப்பாலும்
எமக்குள்ளான
இரவையுடுத்தி
இடைவெளி
மறைக்கிறோம்.
 
 
நன்றி :  வார்ப்பு  இணைய இதழ்

கருத்துகள் இல்லை: