வியாழன், 28 ஏப்ரல், 2011

கலை கரைந்த ஓவியனாய் என்றென்றும் கவிஞர்

கலை கரைந்த ஓவியன்

மழை நேர
தண்ணீர் திவலைகள்...
கரையாதிருக்கும் பெருங்கல்

பிரபஞ்சத்தை வரையும்
தூரிகையோரம்
நனைந்து வழிகிறேன்
அழகானதுன் அமைகை
பாறையடியில் பத்திரமாய்
சிதறல்களின் இரைச்சலை நுகர்ந்தபடி...

எனக்கோ மழைக்கோ பயந்து
யாரென்று உணரும் தயக்கத்தில்
பாதம் வருடி
ஒதுங்கிக்கொள்கிறது
கடல் நத்தை

இயற்கையை, இயல்புகளை
எழுத்தாக்கும் ஓவியன் நானென்று
சொல்ல தவிக்கையில்
உள்ளங்கை தவழ்ந்து
உணர் கொம்புயர்த்தி
இதயமுணர்கிறது நத்தை
முத்தத்து வாசனை இணக்கத்துடன்...

ஓட்டில் தொடர்ந்த ஓவியத்துள்
நீ மட்டுமே நிறைகிறாய்!
வண்ணங்கள் வெற்றிடமாக்கி..
நாளையுனது அறிமுகத்தில்
அங்குலம் அங்குலமாய் பெருகிவிடும்
ஆச்சர்யத்தில் ஜீவிக்கிறது கடல்.

இன்னமும் நான்
கலைகளின் அமிலத்துள்
கரைகின்ற ஓவியனாய்...



நன்றி   :  நிலாச்சாரல் இணைய இதழ்

காற்றில் உலவும் கவிதை


நிரந்தரத்தின் இழப்பு 


இது நாள் வரையிலான
சிரமங்களின்
இறுதி மதிப்பீடு
இனியும் வெளிவராவண்ணம்
இருப்பில் முடக்கியதொரு நெஞ்சம்
எதிர் வரும் தருணத்து
இக்கட்டான கதிர் வீச்சின்
அழைப்பு மணியோசை கேட்க
துயரத்தின் சாவியிட்டு
இலகுவான நிரந்தரங்களை
இழக்க காத்துக்கிடக்கிறது.
கண்ணீரின் அங்கீகாரம்
கவனிக்கப்படாமல்
முடங்கியே கிடக்கிறது.
தளர்ந்து போன மனதில்
முனகல் சத்தம் மிச்சமிருக்கக்கூடும்.



 

 

பிரியங்களின் பிரசவம் 

 

பரந்த காற்று வெளியின்
அடித்தளத்து நுண்படலம்
சமவெளியின் அந்தரங்கத்தை
மறைத்து போர்த்தி பரவியிருக்கும்

நிலமங்கை பேரழகின்
மேல்தளத்து மென்படலம்
மன்மத பொக்கிஷத்தில்
அவிழாது மயக்கம் பிரதிபலிக்கும்

இதற்கிடையே-
எதிர்பாரா நொடிப்பொழுதில்
ஊடலின் விழுது பற்றி தாவி
மௌனம் கலைத்து
தளிர்த்து விடுகிறது
பிரியத்தின் மனமொத்த விதையொன்று...


நன்றி   :  கீற்று இணைய இதழ்






தவிப்பு


நிச்சயம் மழை வரும்
களிப்பில் ஆடும் மயில்
நனைந்தபின் தவிப்பில்!


சுடும் வெயில்


நீரில்லா ஆற்று படுகை
நெடுநேரம் உறங்கியே கழிக்கும்
மதிய வெயில்



சிதறல்


உடைந்த கல் மூக்குத்தி
சிதறல்கள் அனைத்திலும்
பதிந்ததவள் முகங்கள்


காத்திரு


காத்திருக்கும் வண்ணத்துப்பூச்சி
வழிநெடுக பூஞ்செடிகள்
கருத்துப்போகிற மேகம்


நன்றி   : கூடல் இணைய இதழ் 





உறுதியாய் இரு...

ஞானப் புதையலின்
இருப்பிடம் தேடி
நாமெட்டும் முதல் சந்து
தேடல்

தேடுதல் பயணத்தின்
ஆர்வம் அடிக்கல்
இலட்சியம் மைல்கல்
ஒழுக்கம் திசை காட்டி

செய்கையின் நடை பாதையில்
பிழை யெனும் புதை குழி
தென்படலாகும்
பிழைசெய்தல் பிழை யில்லை
மரத்தில் துளையிடல்
பறவையின் வாழ்வு தர்மம்
துளைகளுள்ள மூங்கிலும்
மரங்களில் துளைகளும்
நிர்பந்தங்கள்

யதார்த்தத்தின் படித்துறையில்
தவறுகளின் பாசி படிமம்
நிதர்சனம்

தடங்களை விஞ்சு
நேரத்தை மிஞ்சு
நேர்மைக்கு அஞ்சு
தப்பெனில் கெஞ்சு
கடமைகள் கொஞ்சு
'பொறாமை' கழுகின் குஞ்சு
இழந்ததெல்லாம் நஞ்சு
இனி யெல்லாமுனக்கு பஞ்சு

விமர்சனங்கள்- வினா
விருப்போடு விடையளி
வெற்றி தேடு !
உண்மையாய் உள்ளவரை
உறுதியாய் இரு...


வள்ளுவனின் எழுத்தாணி
உள்ளங்கை வருத்தி
உருவானது
வள்ளுவர் சிலை

மயில், கணபதி, நந்தி, துர்க்கை
முடித்த கைக்கு பரிசு
இப்பணி

உளியும் சுத்தியலும்
ஓயாது உழைத்திருக்கும்
திருப்தியில் பாறாங்கல்
சிறந்த மொழியாக்கம்

வெயிலின் உக்கிரம் ஓங்க
சில வேளை
வியர்வை உறிஞ்சிய சிலை

முடிவுக்குவரும் மொழியாக்கம்
பொருட்பவின் வள்ளுவன் தயார்
எழுத்தாணியின்றி

வெடித்தது யோசனை
உளிஎடுத்த சபதி
சிலையின் உள்ளங்கை திணித்தார்

வீதி நடுவே மேடை நின்று
ஈரடி செய்யுள் எழுதும்
இனி இச்சிலை
சுத்தியலின் இயற்பால் தொடங்கி. 


பணிதல்

அகல் விளக்கின்
சுடர் மொட்டுகள்
கசிந்த வெப்பத்தில்
காற்று வெளியின்
கன்னம்
சூடேறி போகிறது.
கோபத்தில் வளி
தீபத்தை
அணைக்க முயல்கையில்
உள்ளங்கை கூப்பி
மன்னிப்பு கேட்டு
தாழ்பணியும்
இளஞ் சுடர்
பணிதலின் வியாக்ஞானம்
பளிச்சென
சொல்லி போகிறது ! 


நன்றி   :  வார்ப்பு இணைய இதழ் 




இழப்பாறு

சனிக்கிழமை சாயங்காலம்
துக்கம் அனுஷ்ட்டிக்கப்பட வேண்டிய
மாலைநேர நெரிசலின்
கைக்கெட்டிய வாரச்சம்பளத்துள்
மிச்சமிருந்து போகிறது
ஐம்பதின் மடங்கில் இழப்பும்
நூறின் மடங்கில் வருத்தமும் ...

எதிரெதிரே அமர்ந்து
நானும், நடமும்
தாயக் கட்டை ஆடுகிறோம்
நடத்தின் கையகன்று
விழுவதெல்லாம் 'ஆறுத்தாயம்'
விருத்தங்களின் கேளிக்கைகள்
'பழம்' பாட வாய்ப்பின்றி
பரிதவிப்பில் தொடர்கின்றன
சதுரங்க மும்முரமும்
பிறிதொரு தாயங்களை எதிர்நோக்கி ...

வாழ்வு சூழ்ந்து இழப்பு
இழப்பு சார்ந்து வாழ்க்கை

அன்றாட நிகழ்வுகளின்
அலுவல் வரவேற்பறைகளில்
வழுவிழந்த மதில் முழுதுமென
இயலாமை ஆணி அறைபட்டு
இழப்பின் புகைப்படங்கள்
உடன்பாடு விலகி கோர்க்கப்படும்
அதன் பரிமாணங்கள்
அணுவணுவாய் தகர்க்க படுமெனும்
அபரிமித நம்பிக்கையை தொடர்ந்து...

இழப்பின் உள்ளங் கைகளில்
எனைக் கொடுத்துவிட்டு
நகர்கிறேன்
நான் நீரென்று தெரியாமல் போகுமான
தருணங்களில் ...

பிறழ்கிற புதிர் வாழ்வின்
நடம் தற்காலிக சரிவு
நிரந்தரத்தின் சமாதியல்ல ...
 

பந்தய வாழ்வு
 போட்டியை 
நிறைவு செய்தல் 
பங்கெடுப்போரின் 
முயற்சி 

நிறைவு செய்தலைப் 
போட்டி யாக்குதல் 
பரிசு வெல்வதன் 
சூழ்ச்சி 

பரிசுகளற்ற போட்டியின் 
பந்தயக் குதிரையாய்
ஓட்ட முனைப்பில் 
இன்னமும் நீள்கிறது 
வாழ்வின் நீட்சி!
 
 நன்றி   :  உயிரோசை இணைய இதழ்