வெள்ளி, 6 மே, 2016

மார்ச் 9 , 2016 தமிழ் இந்து


தியாவின் மந்திரக் கைக்குட்டை



தியாவுக்கு சின்ன வயசுலயிருந்தே பறவைகள்ன்னா ரொம்பப் பிடிக்கும். குட்டிகுட்டிப் பறவைங்க கொஞ்சிக்கொஞ்சி கூவுகிற குரல் கேட்டால் அவளோட மனசு றெக்கைகட்டிப் பறக்கக் கிளம்பிடும். அவளோட வீட்டு வாசல் முன்னாடி கூரையில் நிறைய மரக்கூடுகள் செஞ்சு தொங்க விட்டுருக்காங்க. கரிச்சான் குருவி, தவிட்டுக் குருவி, வண்ணாத்திக் குருவி, கதிர்க் குருவின்னு வேறவேறவகை குருவிங்க அந்தக் கூடுகள தேடிவந்து தங்கிவிட்டுப் போகும். 

அன்னைக்கு ஒரு நாள் தியாவுக்கு ஒரு ஆசை வந்துச்சு. அவளோட அப்பா முன்னாடி போய் நின்னா. “அப்பாப்பா! எனக்கு வண்ணத்துப் பூச்சிகள வளர்க்க விருப்பமா இருக்குதுப்பா. வாங்கித் தாறீங்களா”ன்னு வாய் திறந்து கேட்டா. அவரு பதில் சொல்லத் தெரியாம தெகச்சுப் போயிட்டார். வண்ணத்துப்பூச்சி வளர்ச்சியோட பரிணாமம் தெரியாம அத வளர்க்க விரும்புறாள்னு நெனச்சார் தியாவோட அப்பா. 

“வண்ணத்துப் பூச்சி முட்டைகள விலைக்கு வாங்கலாம். ஆனா, அதுக்கு முன்னால நம்மகிட்ட பூந்தேன் செடிகள் தோட்டம் வேணுமே. நகரச் சூழல்ல தோட்டம் அமைக்கிறது ரொம்பக் கஷ்டம்”ன்னு சமாதானம் செய்ய முயற்சித்தார். 

அவளுக்கு, கண்ணு ரெண்டும் பொங்கி அழுகை வந்துச்சு. அழுதுகிட்டே அம்மா மடியில போய் சாய்ந்து உட்கார்ந்தாள். 

“சாரிடா தியா! நாளைக்கே நாம நர்ச்சரிக்குப்போயி பூந்தேன் செடிங்களை வாங்கிட்டுவரலாம். அதுகள தொட்டியில வளர்க்கலாம். செடிங்க பூ பூத்ததும் வண்ணத்துப் பூச்சிகள் பூக்களைத் தேடி பறந்து வந்துடும். இப்போ ஒரு வாய் சாப்பிட்டு படுன்னு” சொல்லி தியாவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டாங்க. 

அவ அழுதுகிட்டே இருந்ததால ஒரு கைக்குட்டைய வெச்சுக் கன்னத்தில வழிஞ்ச கண்ணீரத் தொடச்சிவிட்டாங்க. பிறகு அவளத் தூங்க வெச்சாங்க. அந்தக் கைக்குட்டையை கட்டில்ல வைச்சுட்டு போய்ட்டாங்க. தியா, கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை நிறுத்தினா. கண்கள கசக்கிவிட்டுத் தூங்கிட்டா.

நடு ராத்திரி இருக்கும். நல்ல தூக்க நேரத்துல தியாவோட கன்னத்த யாரோ தொட்டுத் தொட்டு பார்த்தாங்க. ‘டக்’குன்னு தியா முழிச்சுப் பார்த்தாள். கண்ணுக்கு முன்னாடி ஒரு அதிசயம். உடம்பு சிலிர்த்துப் போச்சு. அவளோட ரெண்டு உள்ளங்கையையும் விரிச்சு வெச்ச மாதிரி ஒரு வண்ணத்துப்பூச்சி கன்னத்தில உட்கார்ந்திருந்திச்சு. 

“என்னோட படுக்கை அறைக்குள்ள நீ எப்படி வந்தே?” ன்னு கேள்வி கேட்குறதுக்குள்ள, “வா…வெளிய போகலாம்”ன்னு வெளையாட கூட்டுச்சு. ஆனா, தியா வெளையாட்டுச் சாமான்கள் நெறச்சு வெச்சிருந்த அறைக்கு கூட்டிட்டுப் போனா. மறுநாள் விடிகாலை வரையில் ரெண்டு பேரும் ஜாலியா வெளையாண்டாங்க. 

வண்ணத்துப் பூச்சி தன்னோட கதையெல்லாம் சொல்லிச்சு. பொழுது விடிய கொஞ்ச நேரம் இருக்குறப்போ றெக்கை இரண்டையும் மடிச்சு வச்சு வணக்கம் சொல்லிட்டு பறந்துபோச்சு. ‘பூந்தேன் செடிகள் மொளச்சி வந்ததும் வர்றேன்னு’ சொல்லிட்டுப் போச்சு. 

அடுத்த நாள், தியாவுக்கு சளி புடிச்சிருந்திச்சு. முதல்நாள் சாயங்காலம் தேம்பித் தேம்பி அழுதாளே. அதுதான் காரணம். மூக்கு தொடைக்க அவ கையில வேற ஒரு கைக்குட்டைய அவங்க அம்மா கொடுத்து வெச்சாங்க. அந்த கைக்குட்டைய தன்னோட நெஞ்சுக்கு மேல போட்டு தியா தூங்கிட்டா. அன்னைக்கு ராத்திரி, ஒரு கோழிக்குஞ்சு அவ நெஞ்சுல ஏறி வெளையாடிட்டுப் போச்சு. 

இன்னொரு நாள், இருட்டுன பிறகு தியா முன்னாடி பச்சைக் கிளி ஒண்ணு உசுரோட வந்துச்சு. தியாவோட பாட்டி, அவளுக்கு சொல்லிக்கொடுத்த ‘சிகப்பு மூக்கழகி' கதைய மறக்காம அந்தக் கிளி அவகிட்ட ஒப்பிச்சிச்சு. 

கிளிக்கு எப்படி அந்தக் கதை தெரிஞ்சதுன்னு அவளுக்கு சந்தேகம்.. விதவிதமான பறவைக எங்கிருந்து வந்துச்சுன்னு யோசிக்க ஆரம்பிச்சா. மூளையைக் கிளறிப் பார்த்ததுதான் மிச்சம். விடை கிடைக்கலே. 

தியா, தன்னந்தனியா திண்ணையில சோர்ந்து போய் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சா. பால்கனியில துணி காயப்போடுற கொடி கட்டி இருந்தாங்க. அதுல அவளோட கைக்குட்டைகள் வெயில்ல காய்ந்து தொங்கிக் கிட்டு இருந்துச்சி. 

ஒண்ணு…ரெண்டு..மூணுன்னு எண்ணிப் பார்த்தாள். மொத்தம் ஆறு கைக்குட்டைகள். ஒவ்வொரு ராத்திரியும் ரகசியமா வெளையாட வந்த பறவைக எத்தனைன்னு கணக்கு பார்த்தாள். ரெண்டும் சமமா இருந்துச்சு. 

தியா மனசுல பக்குன்னு நெருப்பு பத்தின மாதிரி ஒரு க்ளூ கிடைச்சுச்சு. ஓடிப்போய் கொடியில காயப்போட்ட கைக்குட்டைகள கூர்ந்து கவனிச்சா.
கலர் கலரா கைக்குட்டைகள்ல, அம்மா தச்சுத் தந்த எம்பிராய்டிங் பறவைங்க தொலையாம பத்திரமா இருந்துச்சு. ராத்திரி நேரம் உயிரோட வந்த பறவைகள் மறுநாள் காலையில மறஞ்சு போன உண்மை அவளுக்கு ஓரளவு புரிய ஆரம்பிச்சது. 

அதென்ன? மாயாஜால வித்தைக்காரர் மட்டும்தான் கைக்குட்டைகளக் கசக்கி உள்ளங்கைக்குள்ள மறச்சு வச்சிட்டு புறா, கிளின்னு வரவெச்சு காண்பிப்பாரா? 

அதையெல்லாம் நாம அதிசயமாகப் பார்த்து மலைச்சுப் போறோம். வினோத வித்தைன்னு நம்புறோம். அதே மாதிரி, தியாவோட கைக்குட்டைகளுக்கும் மந்திர சக்தி உண்டுன்னு நம்பணும்.

கருத்துகள் இல்லை: