சனி, 8 நவம்பர், 2014


தி இந்து - மாயா பஜார் - சிறுவர் கதை

வீணா கொண்டாடிய விடுமுறை  

                           கொ.மா.கோ.இளங்





அன்று விடுமுறை நாள். சிறுவர் பட்டாளம் ஒன்று திரண்டிருந்த பூங்கா வாசலில் வந்து நின்றது ஒரு இரு சக்கர வாகனம்.

பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த வீணாவை, தோள்களைப் பிடித்து அலேக்காகத் தூக்கி இறக்கி விட்டார் அவளது அப்பா. அவருடன் ரகசியமாகச் சேர்ந்து தீட்டிய திட்டம் ஈடேறியதில் வீணாவுக்குச் சந்தோஷம்.

ஸ்விங் சேர், பேபி டிரெய்ன், டாஷிங் கார், வாட்டர் ஸ்லைடிங் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகள், அந்தப் பூங்காவில் இல்லை. ஆனாலும், அடிக்கடி அவள் வர விரும்பும் பூங்கா அது.

அப்பா, பையிலிருந்து எடுத்துத் தந்த தேங்காய், இரண்டு வாழைப்பழம், அருகம்புல் மாலை, பசும் பால் ஜார் என ஒவ்வொன்றாக வாங்கி, தன்னிடமிருந்த அழகான கூடையில் அடுக்கினாள்.

கூடையைப் பார்த்தால்…, சரிதான் கோயிலுக்குக் கொண்டு செல்லும் பூக்கூடை அது.

வீணா. அப்பாவோட கோவிலுக்குப் போயிட்டு வந்துறேன்என்ற அம்மாவிடம், சரியென்று தலையசைத்து விட்டு வந்த வீணா, வீட்டைக் கடந்து வந்த பிறகு திட்டத்தை மாற்றிவிட்டாள்.

பச்சைப் பசேலென புல்வெளி, வட்ட வட்டமாய் எழுப்பிய பாத்திகளில் வளரும் கொரியன் கிராஸ். இதுதான் அந்தப் பூங்கா.

பாத்திகளுக்கு நடுவே சில காட்டு விலங்குகளையும், வீட்டு விலங்குகளையும் வளர்க்கிறார்கள். அவற்றை, இரும்புக் கூண்டுகளில் அடைத்து இம்சிக்கவில்லை.

ஓ! வளர்ந்து வரும் புற்களை, தாவரங்களை அழகழகாய்க் கத்தரித்து வடிவமைத்த விலங்குகள் அவை.

வயதான ஒரு தாத்தா, வீணாவின் தோள் உயரத்துக்கு வளர்ந்திருந்த பூனைக்கு முடிதிருத்திக் கொண்டிருந்தார்.

முதலில் அவள், பூனையுடன் விளையாட நினைத்தாள்.

தாத்தாதாத்தாபத்தே பத்து நிமிஷம்நீங்க அனுமதி தந்தா... நான் இந்தப் பூனையோட வெளையாடணும்என்ற வீணாவுக்கு இடம் தந்த தாத்தா சரிம்மா. நீ பூனையோட வெளையாடு. அடுத்ததா ஒரு குரங்கு உட்கார்ந்திருக்கு. அதுக்கு, வரவர வால் நீளமாகிக்கிட்டே போகுது. நாம் போயி அதக் கொறச்சு வெட்டிவிடறேன்.என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஹாய்...நீத்து குட்டி... நீ கேட்ட பால் கொண்டாந்துருக்கேன்என்றவள் ஜாரில் வைத்திருந்த பாலை, தட்டில் ஊற்றிக் கொடுத்தாள். வயிறு முட்ட பாலைக் குடித்த பூனை, கொஞ்சம் மிச்சம் வைத்தது. பிறகு நாக்கை நீட்டி மேலுதட்டை நக்கி நக்கிச் சுவைத்தது.

பூனையுடன் விளையாடி முடித்த வீணா, ‘மாருதி' குரங்கைப் பார்த்து ஹலோசொன்னாள்.

சீக்கிரம் வாயேன்தலைக்குள்ள கெட்டவங்க கெடுபிடி தாங்க முடியல. போக்கிரி பேனுங்க ஒன்னுகூடிக் கும்மியடிக்குது. சரசரன்னு ஊர்ந்து போகுது...சுருக்குன்னு கடிக்குது. தயவு செஞ்சு நீ எனக்கு பேன் பார்த்து விடேன்என்று சொன்ன குரங்கின் தலையிலிருந்த பூச்சிகளைத் தட்டிவிட்டாள்.

கூடையிலிருந்த பழங்களை, மாருதியிடம் கொடுத்தாள். ஒரு பழத்தை உரித்துச் சாப்பிட்ட குரங்கு, மற்றொன்றை இது ஒனக்குஎனத் திருப்பிக் கொடுத்தது.

அதற்குள், தூரத்திலிருந்து பார்த்த ஒரு பச்சைக் குதிரை கோபத்தில் கனைத்தது.

ஒனக்கென்ன இன்னக்கி, எம்மேல உட்கார்ந்து 'டக்கட்டி...டக்கட்டி' சவாரி செய்ய இஷ்டமில்லையா?” என்றது. குதிரையண்ணே! இதோ வந்துட்டேன்.எனக் கையிலிருந்த அருக்கம்புல் மாலையுடன் ஓடினாள்.

புல் குதிரையான எனக்கே புல் மாலையா?” என்ற குதிரை, அவளை முதுகில் ஏற்றிக்கொண்டு பூங்காவை ஒருமுறை சுற்றி வந்தது.

'டக்கட்டி...டக்கட்டி' என்று, நிற்காமல் மீண்டும் ஒரு சுற்றைத் தொடக்கிய குதிரையின் மீதிருந்து கீழே குதித்தாள் வீணா.

பை...பை...நாம் போய் சர்வா' யானையைப் பார்த்தாகணும்என்று யானையிடம் ஓடினாள்.

காயங் எதுவும் பட்டுடுச்சா? வா...வா...செக்கப் பண்ணிக்கலாம்.எனத் துதிக்கையால் அவளைத் தூக்கியது சர்வா. நல்லவேளை...அடிகிடி இல்லாமத் தப்பிச்சேஎன்றது.

சர்வா, அங்கே சுதந்திரமாக வாழ்ந்தது. அதை யாரும் சங்கிலியால் கட்டுவதில்லை. பாகன்களைப் போல அங்குசத்தால் குத்துவதும் இல்லை.

சார்வாவிடம் ஒரு தேங்காயை எடுத்து நீட்டினாள். துதிக்கையால் வாங்கி அதை இரண்டாக உடைத்தது சர்வா. ஒரு பாதியை லபக்' கென வாயில் போட்டு விழுங்கியது. ஒரு மூடியை அவளிடமே திரும்பத் தந்தது.

வீணாவின் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தது.

நேரமாயிட்டதும்மா. இவங்கள இனிமே தண்ணி குடிக்க வெக்கணும். வேட்டைக்காரங்க உள்ள நொழஞ்சிராம, பார்க்கோட கேட்டை மூடி பத்திரமா பாத்துக்கணும்என்று சொன்னபடியே திரும்பி வந்த தாத்தாவுக்கு, கை கூப்பி நன்றி சொன்னாள் வீணா.

நண்பர்களுக்கு டாட்டா...பை...பை' சொல்லி விடை பெற்றாள்.

சாமிக்கிட்ட என்னடா செல்லம் வேண்டிகிட்ட?”என்று வீடு திரும்பியதும் கேட்ட அம்மாவிடம் கூடையைத் தந்துவிட்டு இணைபிரியாத நண்பர்களைத் தந்ததுக்கு நன்றி சொன்னேம்மா!என்றாள் வீணா.

கூடையை வாங்கிக்கொண்ட அம்மாவுக்கு, எந்தச் சந்தேகமும் எழவில்லை.


******************************
 

கருத்துகள் இல்லை: