வியாழன், 13 ஜூன், 2013

குங்குமம் - கவிதைக்காரர்கள் வீதியில் எனது கவிதைகள்

 
குங்குமம் - கவிதைக்காரர்கள் வீதியில் எனது கவிதைகள்


சினேகம்
ஒரு சரிவு தந்த
சினேகத்தைத் துண்டித்து
விடைபெற
வெகுநேரம் எடுத்துக் கொண்டது      
சற்று முன் பழக்கமான  
இலையை விட்டுப் பிரியும்
கடைசி மழைத் துளி!

கோயிலுக்குப் போய் ...
கும்பிட்டுத் திரும்புகையில்
கடவுள்க்கு  முன்
அஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழ
ஒரு தடவைதான்
குழந்தைக்குச் சொன்னோம்
ஒன்பது தடவை குழந்தையை
நமஸ்கரித்து எழுந்தார்
கடவுள்

விடியல்
பச்சைப்புல் அடைகாக்கும்
பனிமுட்டை உடைந்ததும்
பிறந்தது பகல்

மெளன அஞ்சலி
அடையாளம் தெரியாதவர்
ஆதரவற்ற பெரியவர்
யார் இறந்தாலும்
முதலில் கூடி மொய்க்கின்றன
மெளன அஞ்சலிக்கு வரும் ஈக்கள்

குரோடன்ஸ் குடி
மதுப்புட்டியில் வேர்விட்ட கொடி
வளைந்து நெளிந்து வளர்கிறது
குடி போதை  குரோடன்ஸ்
 
இருள் மழை
எரியும் விளக்குடன் விளையாடி
ஏமாறும் ஈசல்களின்
இறகுகள் உதிர்வதில்லை
இருள் மழையில் 

கிரகம்
எழுதி வைத்த கிரகத்தை
அதன் ஓடுபாதையில்
சுழற்றி விட
உதவும் கிரகம் எதுவென
உட்கார்ந்திருக்கும் கிரகங்களில்
ஒன்றைத் தேடிச் சுழற்கிறாள்
வெள்ளிக்கிழை தோறும்
பிள்ளையார் கோயிலில் அக்கா!
                                                                                                                                
-கொ.மா.கோ.இளங்கோ
       

கருத்துகள் இல்லை: