செவ்வாய், 9 ஏப்ரல், 2013

ஆனந்த விகடனில் கவிதை -- அலையாடும் பிரார்த்தனைகள்
அலையாடும் பிரார்த்தனைகள்

இராமேஸ்வரத்துக்கும்
கச்சத்தீவுக்கும் நடுவில்
வேலப்பன் கைதான செய்தியுடன்
பேரலை ஒன்று கரை மோதியது 
கொந்தளித்த குப்பம்
மந்திரி வந்துபோகும் சாலையை
வழிமறித்துப் போட்டதும்
வக்கனையில் இரைந்தது வங்கக்கடல்
துக்கத்தில் கதறியழும்
வேலம்மாளின் கண்ணீரை
தூண்டிலிடத் தொடங்கின
தரையிறங்கிய கேமிராக்கள்
அயல்தேசக் கடற்காவல்
அப்பாவை அள்ளிக்கொண்டு போனதை
அனுசாயா அக்கா சொல்லிச்செல்ல
பாண்டியாடும் நீலவேணியுள்
பிரவேசித்து அழுகை
கண்கள் கசித்த கண்ணீரில்
கரைந்தது கடற்கரை
அக்கடற்குப்பத்தில்
நங்கூரமிட்டிருந்த ஐயமும், அதிர்ப்தியும்
அக்கரை தேசத்தின்
அதிபரையோ அல்லது அமைச்சரையோ
தவிக்கவிட்ட தகவலில்லை 
உள்ளூர்காரனின் உறுத்தல் கூட
ஒருசில வினாடியுள் உறைந்து போயிருக்கலாம்
"சுறாவுக்கு எரச்சியாயிருந்தா
 எஞ்சீவன் கெடந்து  துடிச்சிருக்காது
சூழ்ச்சிக்காரன் வலையில
சிக்கியா தவிக்கணும் பாவி"
வேலம்மாள் வீசிய வாய்ச்சொல்
ஆடாமல் அசையாமல்
நிறுத்திவைத்தது  அலைகளை
அவ்வொரு கணம்
வீசிய காற்றின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியாத மாதாகோயில் மணி
டணீர்,டணீரென ஒலிக்கத்துவங்கியதும்
" இம் மணியோசை
கடல் கடந்து தவமிருக்கும்
கெளதம புத்தரின் காதுகளை
துளைக்கச்சொல்லி பிரார்த்திப்போம்
வேலப்பனின் விடுதலை வேண்டி
தமிழகத்தின் நம்பிக்கையை சமர்ப்பிப்போம்"
என முடித்துக் கொண்டார்
கேமிராமேன் வெற்றியுடன் உடனிருந்த
ஹாட் நியூஸ் செய்தியாளர்.

-கொ.மா.கோ.இளங்கோ

கருத்துகள் இல்லை: