திங்கள், 21 பிப்ரவரி, 2011




Monday January 17, 2011

கருவெட்டா தமிழ் அணுக்கள்!

கொ.மா.கோ.இளங்கோ




தலையணை
நிரம்பிய உறக்கம்
நித்திரையின் உள்ளீட்டில்
உற்புகுந்து
வேரற்று விருட்சமென
கற்பனை பரப்பி
நிமிடங்களின் நீளம் வளர்த்து
கருகி மடியும்
கனவுகள்

இதயம் எத்தனித்த அம்புகள்
அங்கிங்கெலாம் அலைந்து
ஆரண்யம் அடங்கும்
அரக்கன் அலங்கரிப்பான்
மகிழம்பூ மார்சேரும்
கோலமிடுபவள்
கைக்குட்டை காதல் வரைவாள்
விமான பணிப்பெண்
விகடம் கேட்ப்பாள்
மான்கள் பசுவாகும்
மாவடு சுவையில்
பலாச்சுளை வாசனை யனைத்தும்
கனவு கொண்ட காண்டங்கள்
என்னுள் ... இல்லை இவைகள்
இதய சாகுபடி
தமிழ் கனவு!
கவிதை பித்தம்!

ஆறாம் வகுப்பு...
புத்தகப்பையில் தமிழ் பாட நூல்
தலைகீழாய் தூங்கும்
வெள்ளை காகிதத்தில்
வினாக்கள் மட்டுமே எழுதிய நாட்கள்
சோனையாண்டி வாத்தி கைகளில்
காயமானது கன்னம்
தத்தளித்திருந்த தமிழ்
தடுமாறி கரை சேரும்
எழுபதுகளின் பிள்ளைத்தமிழ்
அசை கற்று மரபின் பல்லக்கேறும்

இந்நாள்...
கவிதை எழுதாது
கனவில்லை
தலையணை நிரம்பி தமிழ்
ஈரடி சீரில் மூச்சு
இதய அசைவு எதுகை
மூளை தூண்டும் மோனை
விரல் சுண்டிய விருத்தம்
இருளுக்கு பயந்து
என் படுக்கையறை பதுங்கும்
எழுத்துக்கள்
இவை யாதும் இன்றி
எமக்கில்லை கனவு

கனவுகளின் பங்களிப்பில்
கவிதை முளைவிடின்
இன்னும் எழா .. எழுதா ...
கவிதைகள்
காற்று வெளி
திரை சீலை
புங்கை மரம்
பால் வீதி
பேனா முனை யெங்கும்
வியாபித்திருக்கும்
கருவெட்டா
அணுக்களாய்...



Kelango_rahul@yahoo.com


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் : 17 .01 .2011


Sunday January 30, 2011

ஹைக்கூ கொத்து

கொ.மா.கோ.இளங்கோ





தாத்தா கட்டிய வீடு
குடியேறியிருக்கும்
சிலந்தியின் வாரிசு




இரும்பு சத்து குறைவு
சிவப்பு மாத்திரை விழுங்கும்
அந்தி





உடலுறுப்பு தான பதிவேடு
கையெழுத்திட்டாள்
ஐந்தாம் நிலை சிறுமி




மழை பெய்த நாள்
திருடு போகும்
மண் வாசம்




குளம் நிறைய நீர்
குளிக்க பயந்து
தாமரை பூக்கள்




மின்னல் மின்னும்
இடி தொடரும்
குடிசையில் வானொலி


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் : 30 .01 .2011
 



Sunday February 6, 2011

வாண்டு பருவமும் வயதான கிழவியும்

கொ.மா.கோ.இளங்கோ





'சொர்க்கு
தவளை நீச்சல்
பேக் சார்ட்
பூசணிக்காய்
பல்டி
சப்பை கட்டு
முங்குளி பாம்பு '
கண்மாய் மூழ்கி குளித்ததில்
பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள்
மூன்று மணி நேர குளியல்
உள்ளம் உலகம் உலவி வரும்
உற்சாகம் குளத்தின் தரை தொடும்
என்னோடு சேர்த்து
நான்கு வாண்டுகள்

'ஊளை' சந்திரன்
'சீழ்' முருகேசன்
'இங்கு மண்டை'
'சுண்டெலி' பாபு
வகுப்பறை அணிவித்த
தேன் தமிழ் பட்டங்கள்

வாரமிருமுறை
பாடசாலைக்கு முழுக்கு
கண்மாய்க்கரை 'மஞ்சனத்தி மரம்'
'பைகட்டுகளின்' சேமிப்பு கிடங்கு
புத்தகமும் பரீட்சையும் புளிக்கும்
மதிப்பெண் அட்டை கிடைக்கப்பெறும்
முந்தைய நாட்களில்
'ஊமத்தம் பூ' பலன் சொல்லும்
சத்தம் எழுப்பி பூ உடையின்
தமிழ் தேர்வில் பாஸ்

ஊர் மேய்ந்த பொழுதுகள்
வீண் வம்பிழுத்த வாதங்கள்
கணக்கிலில்லை
குண்டு சோடா கோலியாட்டம்
குதூகல கொண்டாட்டம்
'ஏத்தி பித்தி '
'வை ராஜா வை '
' தட்டு தாம்பூலம் '
'கள்ளம் போலீஸ்'
' பிலிம் கட்டு சேர்க்கை'
வீரமேரிய விளையாட்டுகள்
தினந்தோறும்
தோற்ற நினைவு தான்

காது இழுத்து பிடுங்கும்
பிச்சையம்மாள் டீச்சர்
மேசைமேல் முட்டியிட வைக்கும்
மார்த்தாண்டம் வாத்தியார்

சின்ன வயசு கூத்து
செயல் பிழைகள்
சிங்காரப்பருவம்
மீண்டு வருவதற்கில்லை
முண்டியடித்து புகுந்து
முரண்டு செய்து
தட்டில் நிரப்பிக்கொள்ளும்
மதிய சத்துணவு
'கம்மங்கதிரு மிட்டாய்' விற்கும்
கிழவியுடன் பகிர்ந்துன்பேன்
அவள் பிசையும் உருளைகள்
மிட்டாயை மிஞ்சி இனிக்கும்

அதன் பின்
கிழவியை யாரும்
பள்ளிக்கூடம் பக்கம்
பார்த்ததே இல்லையாம் ...





நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் :06 .02 .2011







Sunday February 13, 2011

ஹைக்கூ கொத்து – 2

கொ .மா.கோ.இளங்கோ




உழுத நிலம்
உரமாகி போகும்
மண் புழுக்கள்

பேருந்து நிறுத்தம்
முந்தினர் பலர்
வழியின்றி திணறும் காற்று

சேவல் கூவும் அதிகாலை
விழித்து கொள்கிறான்
ஆதவன்

உடல் கெடுத்த பாவம்
உயிர் வளர்த்து பார்க்கும்
மது குப்பியுள் பூங்கொடி

வாசல் கதவு தாண்டும்
முயற்சியில் குழந்தை
முந்திக்கொண்டது மூத்திரம்

சாலையோர விபத்து
சிறுமி பிழைத்தாள்
எறியப்பட்ட பூக்கள்


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் :13 .02 .2011

கருத்துகள் இல்லை: