சனி, 7 மே, 2011

இயலாதோருக்காக...

அன்பானவர்களே,

மின்சார இரயில் பயணம் பெருவாரியான மனதில் மின்சாரம் பாய்ச்சியிருக்கும் . பார்வையற்றோர் பலரின் பாட்டு தாலாட்டில் 'தடக் ' ' தடக்' கென நடனமாடி கொள்கிறது இரயில். உச்ச சுரத்தில் சிலரின் பாடல் உயிரின் ஆழம் பார்த்து தூர் தொட்டுவிடுகிறது .

இப்போதெல்லாம் நானந்த பயணம் நேசிக்கிறேன் .
" இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை "
நாகூராரின் பாடலில் நெஞ்சோரம் ஈரம் கசிந்திருக்கத்தான் வேண்டும். இயலாதவர்கள் இறைவனை யாசிக்க இயல்பு மனிதர்கள் இவரை நேசித்தாக வேண்டும்.

" பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு " -- அவரின் குரலில் சிறகடிக்கிறது பலரின் நிம்மதி.
இருபது நிமிடத்தில் எனைப்போல் இதயம் தொலைத்தவர்கள் எத்தனைபேர். உதவும் கரங்களில் ஊரிக்கொண்டேதானிருக்கும் இளகிய மனது.

இப்படித்தான் மாற்று திறனாளி யொருவர் மதிய வேலை இரயில் பெட்டியேற... இசைக்கான எம் செவிப்பறைகள் அசைந்து கொடுத்தன . அவர் தொடங்கினார் .

" கொடுத்ததெலாம் கொடுத்தார் - அதை
யாருக்காக கொடுத்தார் .
ஒருத்தருக்கா கொடுத்தார் - இல்லை
ஊருக்காக கொடுத்தார் "
அங்கேயொரு ஆச்சர்யம் உணர்ந்தேன் .
பயணிகள் அனைவரும் பைகள் துலவினர் .
" உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று "
தட்டின் காசொலி கணீரென கேட்டது . நடப்பவை நியாயமாக பட்டது .


யார் எவ்வளவு கொடுத்திருந்தாலும் பகிர்ந்துண் என்கிற கோட்பாடு அந்த வேளையில் எல்லோருடைய நெஞ்சிலும் சாட்டையடியாய் வலித்திருக்கும் .

நிறைந்த மனதோடு கொடுத்தன கைகள் . நிரம்பியிருக்கும் அத் திறனாளியின் கண்ணீர் பைகள் .
பல பார்வையற்றோரின் பலம் இதுதான் .

நம்மோடு பயணிக்கிறவர்கள் நலமோடு வாழ தலைக்கொரு 'சும்மாடு' சுமக்கலாம் .
பைகளில் கொஞ்சம் சில்லறைகளோடு பயணிப்போம் . இயலாதோரின் கல்லறைகளை தகர்த்தெடுப்போம்

அன்புடன்
கொ.மா.கோ.இளங்கோ

கருத்துகள் இல்லை: