வியாழன், 10 மார்ச், 2011

தமிழ் கவிதை தேரின் தொடர்கிற பயணம்



யாரை விடும் பசி


பறவையின் அலகில் புழு
குதூகலத்துடன் குஞ்சுகள்
கண் பார்வை தொலைவில் கழுகு!



மாற்றம்

கால் ஒடிந்த மாடு
சந்தோசத்தில் கன்று
மிஞ்சியது மடு!


அழுத கண்ணீர்


கரையோரம் கருவேலமரம்
வெட்டிச் சாய்க்கிறான்
வியர்வையில் நனையும் வேர்.




மலரும் பூங்கா

அந்தி சாயும் அழகில்
பூ பூத்து குலுங்கும்
பூங்காவின் இருக்கைகள்


அழைப்பு ஒலி

அவள் திட்டிய வார்த்தைகளை
சேமித்து வைத்திருக்கிறேன்
கைப்பேசி அழைப்பென


காதலர் தினம்

பத்திரப்படுத்தினேன்
பலூன்கள் அனைத்தும்
அவள் நிரப்பிய காற்று


காதல் இணைய(யு)ம்

பயனர் பெயர் 'நான்'
கடவுச் சொல் 'நீ'
காதலுள் 'நுழைக'!



முறிந்த கனவு


இரவில் எழுதிய கவிதை
இலக்கணப் பிழையோடு விடியும்
கனவு!

விடுபட்ட இருமுகம்

அவளின்
கால் பட்டு சிதறும்
மழை நீர் முத்துக்களில்
தொலைகிற என் முகம்
கரைந்து
நொறுங்கி
இடறி சிதறி
காணாமல் போகின்றன
தேடி பார்க்கிறேன்
பார்வை வீசி
பாதம் வரையிலும்
மழை நின்று
மிதமாய்
குளிர் வாடை காற்று
உற்சாகத்தில் என்னவள்
என்னவென்று தவிக்கிறேன்
இருவரின் முன்பு
புதிதாய்
தேங்கிய நீர் குட்டை
தெளிவாய் தெரிகிறது
தொலைந்து போன
என் முகம்
பிரகாசமாய்
தோள் சாய்ந்து
சந்தோசத்தில் அவள்
அழகாய்...
அழகழகாய்...
இரு முகம் தண்­ணீரில்!
  
நன்றி :  கூடல் இணைய இதழ்

கருத்துகள் இல்லை: