சனி, 22 பிப்ரவரி, 2014
கல்கி இதழில் வெளியான எனது கவிதைகள்
வீட்டுப்பாடம் எழுதிமுடித்த
வீணா குட்டியின் நோட்டைச் சரிபார்க்கும்
வேலையினி அப்பாவுக்கு
“கோணல் மாணலாக் கிறுக்கக் கூடாது
பூஜ்ஜியத்துல ஒம்பது கழியாதில்லே மின் குஞ்சுன்னு தப்பா எழுதலாமா”
புரிந்து விட்டதாய்த் தலையசைத்து
புன்னகைத்த வீணா குட்டியை
“போதும்டா கண்ணு…போய் விளையாடு” என
வெளியேற அனுமதித்தார்
அப்பாவை அருகில் அழைத்து
உட்காரச் சொல்லி,ஒரு விளையாட்டை இப்படித்தான் தொடங்கினாள் வீணா குட்டி
“அப்பா…நீ ஒண்ணாங்கிளாஸ் பையனாம்
ஒனக்கு நான் டீச்சராம்
வீட்டுப்பாடம் எழுதுன நோட்டை
விருட்டுன்னு எடுத்துட்டு வா பாக்கலாம்!”
கருணை செய் குழந்தாய்!
கர்ப்பகிரகத்தைச்
சுற்றிவரும்
அம்மாவின்
கைபிடித்து
ஆடியசைந்து
நடந்தது குழந்தை
எனக்கொரு கை
தந்து
கருணை செய்வாயா
என
குழந்தையைக்
கேட்டு
கைக்கூப்பி நின்றார்
கடவுள்
காதெட்டும்
தொலைவில்
கணீர் கணீரென
ஒலித்தது
கோயில் மணி!
*****
வியாழன், 13 ஜூன், 2013
குங்குமம் - கவிதைக்காரர்கள் வீதியில் எனது கவிதைகள்
சினேகம்
ஒரு சரிவு தந்தசினேகத்தைத் துண்டித்து
விடைபெற
வெகுநேரம் எடுத்துக் கொண்டது
சற்று முன் பழக்கமான
இலையை விட்டுப் பிரியும்
கடைசி மழைத் துளி!
கோயிலுக்குப்
போய் ...
கும்பிட்டுத்
திரும்புகையில் கடவுள்க்கு முன்
அஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழ
ஒரு தடவைதான்
குழந்தைக்குச் சொன்னோம்
ஒன்பது தடவை குழந்தையை
நமஸ்கரித்து எழுந்தார்
கடவுள்
விடியல்
பச்சைப்புல் அடைகாக்கும் பனிமுட்டை உடைந்ததும்
பிறந்தது பகல்
மெளன
அஞ்சலி
அடையாளம்
தெரியாதவர்ஆதரவற்ற பெரியவர்
யார் இறந்தாலும்
முதலில் கூடி மொய்க்கின்றன
மெளன அஞ்சலிக்கு வரும் ஈக்கள்
குரோடன்ஸ் குடி
மதுப்புட்டியில்
வேர்விட்ட கொடிவளைந்து நெளிந்து வளர்கிறது
குடி போதை குரோடன்ஸ்
இருள் மழை
எரியும் விளக்குடன் விளையாடி
ஏமாறும் ஈசல்களின்
இறகுகள் உதிர்வதில்லை
இருள் மழையில்
எழுதி வைத்த கிரகத்தை
அதன் ஓடுபாதையில்
சுழற்றி விட
உதவும் கிரகம் எதுவென
உட்கார்ந்திருக்கும் கிரகங்களில்
ஒன்றைத் தேடிச் சுழற்கிறாள்
வெள்ளிக்கிழை தோறும்
பிள்ளையார் கோயிலில் அக்கா!
-கொ.மா.கோ.இளங்கோ
செவ்வாய், 9 ஏப்ரல், 2013
ஆனந்த விகடனில் கவிதை -- அலையாடும் பிரார்த்தனைகள்
அலையாடும் பிரார்த்தனைகள்
இராமேஸ்வரத்துக்கும்
கச்சத்தீவுக்கும் நடுவில் வேலப்பன் கைதான செய்தியுடன்
பேரலை ஒன்று கரை மோதியது
கொந்தளித்த குப்பம்
மந்திரி வந்துபோகும் சாலையை
வழிமறித்துப் போட்டதும்
வக்கனையில் இரைந்தது வங்கக்கடல்
துக்கத்தில் கதறியழும்
வேலம்மாளின் கண்ணீரை
தூண்டிலிடத் தொடங்கின
தரையிறங்கிய கேமிராக்கள்
அயல்தேசக் கடற்காவல்
அப்பாவை அள்ளிக்கொண்டு போனதை
அனுசாயா அக்கா சொல்லிச்செல்ல
பாண்டியாடும் நீலவேணியுள்
பிரவேசித்து அழுகை
கண்கள் கசித்த கண்ணீரில்
கரைந்தது கடற்கரை
அக்கடற்குப்பத்தில்
நங்கூரமிட்டிருந்த ஐயமும், அதிர்ப்தியும்
அக்கரை தேசத்தின்
அதிபரையோ அல்லது அமைச்சரையோ
தவிக்கவிட்ட தகவலில்லை
உள்ளூர்காரனின் உறுத்தல் கூட
ஒருசில வினாடியுள் உறைந்து போயிருக்கலாம்
"சுறாவுக்கு எரச்சியாயிருந்தா
எஞ்சீவன் கெடந்து துடிச்சிருக்காது
சூழ்ச்சிக்காரன் வலையில
சிக்கியா தவிக்கணும் பாவி"
வேலம்மாள் வீசிய வாய்ச்சொல்
ஆடாமல் அசையாமல்
நிறுத்திவைத்தது அலைகளை
அவ்வொரு கணம்
வீசிய காற்றின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியாத மாதாகோயில் மணி
டணீர்,டணீரென ஒலிக்கத்துவங்கியதும்
" இம் மணியோசை
கடல் கடந்து தவமிருக்கும்
கெளதம புத்தரின் காதுகளை
துளைக்கச்சொல்லி பிரார்த்திப்போம்
வேலப்பனின் விடுதலை வேண்டி
தமிழகத்தின் நம்பிக்கையை சமர்ப்பிப்போம்"
என முடித்துக் கொண்டார்
கேமிராமேன் வெற்றியுடன் உடனிருந்த
ஹாட் நியூஸ் செய்தியாளர்.
-கொ.மா.கோ.இளங்கோ
சனி, 25 ஆகஸ்ட், 2012
சாகித்திய அகாதெமி விருது - கொ. மா. கோதண்டம்
குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம்
குறிஞ்சி செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான (2012 ) 'சாகித்ய அகடமியின்' பாலசாகித்ய புரஷ்கார் விருது கிடைத்துள்ளது. இன்று இந்த அறிவிப்பை கிடைக்கப்பெற்றோம்.
எனது தந்தையார் எழுதிய ' காட்டுக்குள்ளே இசைவிழா' எனும் சிறுவர் படைப்புக்கான விருதாகும்.
அறிந்தவர்கள் தொடர்புகொள்ள கொ.மா.கோ அவர்களின் அலைபேசி : 9944415322
நிவேதிதா புத்தகப்பூங்கா வெளியிட்ட ’காட்டுக்குள்ளே இசைவிழா’ சிறுவர் நூலுக்கு இந்த வருட சாகித்திய அகாதெமி விருதை குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் பெறுகிறார்.
நன்றி சாகித்திய அகாதெமி.
குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் அவர்கள், 15. 9. 1938 இல் கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். மனைவி ராஜேஸ்வரிகோதண்டம் எம்.ஏ. ஹிந்தி படித்தவர். 15 நூல்கள் எழுதியவர். இரு மகன்கள், குறளமுதன், இளங்கோ .
நாவல், சிறுகதை, நாடகம், உரை, ஆய்வு, தொகுப்பு முதலிய துறைகளில் 100 நூல்களுக்கு மேல் வெளிவந்துள்ளன. பதிப்பகங்களில் 15 நூல்கள் வெளி வர உள்ளன.
முதல்நூல் 'ஆரண்ய காண்டம்' குடியரசு தலைவர் விருது பெற்றது. பல பரிசுகள் விருதுகள் பெற்றுள்ளார்.
2007 ல் மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது.
சிவசைலம் முதல் ஏற்காடு கொடைக்கானல் மலைகளில், அடர்வனங்களில், மலைமக்கள் குடிசைகளில், அவர்களுடன் குகைகளில், ஆற்றங்கரைகளில் தங்கி பல தடவைகள் பல நாட்கள் வனங்களில் சுற்றி தாவரங்கள். அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள், பற்றி ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக நூல்கள் எழுதியவர்.
செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.
திருக்குறள் உரை, திருவள்ளுவர் இன்ப நாடகம் எழுதியவர். புதுக்கவிதையில் முத்தொள்ளாயிரம் எழுதியுள்ளார். மணிமேகலை இலக்கியத்தை நாடகமாக எழுதியவர். மணிமேகலைக்கு உரை எழுதியவர். புதுக்கவிதையில் மணிமேகலை எழுதியவர்.
இராஜபாளையம் மணிமேகலை மன்றத் தலைவர்.
விலாசம்:
குறிஞ்சிச்செல்வர். கொ.மா. கோதண்டம்
குறிஞ்சித்தெரு, முத்து நகர்
பி.எஸ்.கே. அஞ்சல்
இராஜபாளையம் - 626 108
*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







