ஞாயிறு, 20 டிசம்பர், 2020

வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2020- சிறந்த சிறார் இலக்கியம் –சூரியனை ஒளித்து வைத்த சிறுமி - கொ.மா.கோ.இளங்கோ

 



வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2020
சிறந்த சிறார் இலக்கியம் – ’சூரியனை ஒளித்து வைத்த சிறுமி’

ஆசிரியர் – கொ.மா.கோ.இளங்கோ
பதிப்பகம் – புக்ஸ் பார் சில்ரன் - பாரதி புத்தகாலயம்
மனித சமூகத்தின் பரிசுத்தமான அங்கம் என்றால் கண்டிப்பாக குழந்தைகள்தான். குழந்தைகளின் உலகம் கதைகளாலும் கனவுகளாலும் கற்பனைகளாலும் பல்வேறுவிதமான கேள்விகளாலும் ஆனது. இயல்பிலேயே கற்பனை வளம் அதிகம் கொண்ட குழந்தைகளுக்கு அவர்கள் விரும்புகிற விதத்தில் கதைகளைப் படைப்பது மிகவும் சவாலான ஒன்று. அந்த வகையில் எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ தனது கதைகளின் வழியே குழந்தைகளை ஓர் பரந்துப்பட்ட உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறார்.

இந்த உலகில் நீங்கள் ஓவியத்திலிருந்து வெளியேறி சூரியனையே ஒளித்து வைத்த சிறுமியைச் சந்திக்கலாம், விளக்கில்லாத ஆம்புலன்ஸிற்கு வழிகாட்டிய மின்மினிகளைக் கண்டு சிலிர்க்கலாம், நிலவைப் போலிருக்கும் கலாவுடன் சேர்ந்து நிலவு பார்த்து குதூகலிக்கலாம், ஆழ்கடலின் அதிசயங்களையும் பாலைவன மணற்குன்றுகளையும் கண்டு வியக்கலாம்….இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு அதிசய உலகிற்குள் நம்மைக் கூட்டிச் செல்வதோடு நமக்கான நல்லொழுக்கங்களையும் சூழலியல் சார்ந்த பொறுப்புணர்வுகளையும் இயல்பான முறையில் நமக்குக் கடத்துகிறார் ஆசிரியர். குறிப்பாக வீட்டுக்கு வருபவர்களை எவ்வாறெல்லாம் வணக்கம் சொல்லி வரவேற்க வேண்டுமென தனது அம்மாவால் செயற்கையான முறையில் பயிற்றுவிக்கப்படும் சிறுமி தனக்குப் பிடித்தமான தாய்மாமனைக் கண்டதும் அவரை எவ்வாறு வரவேற்கிறாள் என்பது உண்மையிலேயே பரவசமூட்டுகிறது. குழந்தைகளிடமிருந்து பெரியவர்களாகிய நாம் கற்றுக்கொள்வதற்குத்தான் எவ்வளவு இருக்கிறது…

இப்படி வெவ்வேறு விதங்களில் குழந்தைகளின் உலகையும் குழந்தைகளுக்கான உலகையும் சிறப்பாகப் பதிவு செய்த வகையில் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் குறிப்பாக பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ‘சிறார் கதைகள்’ இவை என #வாசகசாலை இந்நூலை அழுத்தமாகப் பரிந்துரைக்கிறது.

எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ அவர்களுக்கும் இந்நூலினை சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயத்திற்கும் #வாசகசாலை யின்
வாழ்த்துகள்
. மகிழ்ச்சி!


கருத்துகள் இல்லை: