வியாழன், 10 மார்ச், 2011

இளங்கோவின் விரல்களில் முளைத்த தமிழ் கவிதை வேர்கள்


தோல்விக்கான அடையாளம்


 
அழைக்கிறபோதேல்லாம்
உன் பலத்தின் வசப்படுதல்
எனக்கினி சாத்தியமில்லை.

வளியின் சுழற்சியில்
இறுபட்ட சருகென விரைகிறது
குறுமிளகு ஆயுள்.

இரட்டை தாவணியை
உயர்த்திப் பிடித்து
ஏகாந்த வெளியின்
இரம்யத்துள் சிறகடித்தல்
இன்றைய தினத்தில் பதிவான இச்சை.

எனைத்தேடி அலையாதே !
செம்பருத்தி இதழ் மறைவில்
நெடுநேரம் கழித்த
நேற்றைய சந்திப்பு மூலதனமல்ல
அதன் தனிமான அழுத்தம்
இனி மீள்வதற்கில்லை.

என்மீதான ஆசை
உன்னுள் ஆதிக்கம் செலுத்துவதாய்
உளறிய வழக்கை
பின்னெடுத்துக்கொள்

அடர்வான ஆச்சரியத்துள்
அலைந்து அடைபடு
தசை தங்கிய தாகங்கள்
உதிர் படும் தீந்தை
புனைவில் மீட்ட சுரத்தை
ஒப்பனை செய்தல்
ஒப்புக் கொள்வதற்கில்லை.

ஊர்தலின் நிர்பந்தங்கள்
கடந்த முனைப்பில்
இருவருமே சிறகடித்தோம்
மீண்டுமொரு ஊர்தலுக்கான பயிற்சியின்
அவசர ஆளுமையில்
அவதரித்த உணர்வுகள்
அனிச்சையாய் தோற்றுபோகலாகும்.



நன்றி : கீற்று இணைய இதழ் 



நானென்ற விமர்சனம்

யாராவேன் நான்?
அறிமுகம் யாதென தெரியாதொரு
தருணங்களை முடிச்சிட்டு 
தலையிருத்தி சுமந்து
நிற்கிற மேகம் 
எதிர்படுவோரின் 
விமர்சனத்துள் முறிந்து 
சாக்கடை மழையெனப் பெய்கிறது. 

எச்சில் படும்
விமர்சனங்களின் கதிர்வீச்சில்
இதயப் பூங் கொடியின்  இலைகள்
பச்சயமற்று மடிதல்
வாடிக்கையாகிறது.

நிலையற்ற மதிப்பீடுகள்
நெஞ்சக் குடுவையின்
அமிலக்கலவையை
நிலைகுலைக்கலாகும்.
நல்லவை கெட்டவை பிரித்தலின் சாத்தியம்
இல்லாமல் போகிறது
இயல்பான வேதிய கலவையுள்.
குறைகளின் நீட்சியை
பிரதிபலிக்கும் கண்ணாடியுள்
சுயவிமர்சனம்
பாதரச பூச்சென
படிந்ததின் உண்மை
நிராகரித்து தொடர்கிறது
என் பயணம்...
திரும்பிய திசையெலாம்
மெல்ல சூழும் விமர்சனங்களின்
திராவகச் சாலைகள்!

நன்றி : கீற்று இணைய இதழ் 




சிக்கலில் சிக்கிய வினாக்கள்



மனசெனும் படகில்
வினாக்களின் பயணம்
துடுப்படிப்பாரின்றி
தளும்பி... ததும்பி..
நகர்கிறது
தொலைவில் புலப்படும்
சஞ்சல சுழலில்
சிக்கி தவித்தல்
உறுதி செய்யப்பட்ட நிமிஷங்கள்
நெஞ்சக் கரைகளில்
தொங்கும் மரங்கள்
கிளைகள் பட்டுவாடா செய்த
புயல் காற்றால்
தள்ளப்படுகிற படகு
தற்காலிகமாய்
வேற்றுப் பாதையேற்று
தொடர்கிறது..
பொருளடக்க விளக்கங்களின்
விவரணம் தேடும்
பயணத்தை
அணை சேர்ந்த தருவாய்
தவறி முறிந்த படகு
அள்ளி வீசப்பட்ட வினாக்கள்
தப்பியனவை மட்டும்
மதகு மோதி  ஒட்டிக்கொள்ளும்
மீண்டும் விடைகள் தேடி
எட்டிப்பார்த்த தருணம்
அணையில்
நீர் வரத்து அதிகரிப்பின் 
எச்சரிக்கை கொடி

நன்றி : பதிவுகள்  இணைய இதழ்



கிராமங்கள் கற்பிக்கும்


விரிந்த நெஞ்சு
துரித தேடல்
தெளிந்த பார்வை
தற்காப்பு கணிதம்
பகைவெல்லும் பயிற்சி
பொது உயிர் காப்பு
தியாக பொறுப்பு
வேண்டிய அளவைகளில்
வெற்றி கண்டு
பொறுக்கப்பட்ட பூனைகள்
வித்தை மறந்த வேளை
இல்லவேயில்லை...
வீரம் விட்டொழித்த காலம்
வேட்டையாடப்படுகிறது
தலைவர்களின் உயிரும்
ஆட்சியர் மனைவியின் கண்ணீரும்
வியூகம் அழிக்க தவறியதன்
விளக்கம் அளிக்குமுன்
நினைவிருத்திக்கொள்ளலாம்
வந்த பாதை பின்னோக்கி  போகையில்
வழி மறிக்கும் ஆலமரம்
வடக்குப்பக்கம் காணியில்
வாளெடுத்து குதிரையேறி நிற்கும்
ஊர்க்காவல் மாசனக்காளை
கற்காத ஓலை
கடமை தவறாத சிலை
மொத்த கிராமத்து மூச்சும்
மாரி கொத்தனார் வடித்த மீசையில்
காத்தலின் குறள் கேட்க
கள்புட்டி படைத்தல் போதும்
மாசனக்காளை
கிராமத்து பூனையல்ல
கரிசல் வாழ்வின் சேனை !

நன்றி : பதிவுகள்  இணைய இதழ்



பல்லுயிர் ஓம்புதல் தலை




நினைவிலில்லை
பச்சை தென்னக்கீற்றில்
கூரை வேய்ந்த நாள்
சூரனை வதம் செய்யும்
சொக்கன் கண்மாய் இறங்கிய நாள்
விடியற்காலை தொடங்கி
வான் கருக்கும் வேளைக்குள்
புதிதாய் தொப்பி அணிந்த குடிசை
கீற்றினை பகுப்பார் நைனா
பாதியில் அறுபட்ட பச்சை சருகு
பொறுத்துக்கொள்ளும் வலியில்
விரல் சூப்பிகொண்டேன் நான்
இரத்தம் கசிந்த பிரம்மை


மழை, வெயில் தாக்குதலில்
மக்கிப்போன குடிசை
துண்டு துண்டாய் சருகுகள்
கொட்டித் தீர்க்கும்

மாற்று கூரை வேயும் முடிவில் நைனா
மறுத்திருப்பேன் நான்
விளக்குதல் கடினம்
உதிர்ந்த சருகொன்றை
உள்ளங்கை வைத்தேன்
ரேகை பதிந்து ஊர்ந்திடும்
கரையான்கள் ...



kelango_rahul@yahoo.com


நன்றி : திண்ணை இணைய இதழ்


கருத்துகள் இல்லை: